தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுத் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் நேற்று காலை பொறுப்பேற்றார். குழுவின் செயல்பாடுகள், மேல் முறையீடு செய்த பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் நீண்டநேரம் ஆலோசனை செய்தபின், "ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தும் வகையில், மேல் முறையீடு செய்த, 6,400 பள்ளிகளுக்கும் விரைவில் புதிய கட்டணம் அறிவிக்கப்படும்` என, தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், " மேல் முறையீடு செய்த பள்ளிகளிடம் இருந்து உரிய விவரங்களை பெற்று, நான்கு மாதங்களுக்குள் புதிய கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டள்ளது.ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதம் முடிந்துவிட்டாலும், இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்வதற்கு தேவையான ஆவணங்களை, பள்ளி நிர்வாகங்கள் ஏற்கனவே அளித்திருந்தாலும், கூடுதல் விவரங்கள் இருந்தால், குழுவிடம் உடனடியாக தரலாம். அதை பரிசீலனை செய்து, எவ்வளவு விரைவாக புதிய கட்டணத்தை அறிவிக்க முடியுமோ, அறிவிப்போம். சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரும் ஆவணங்களின் அடிப்படையில், புதிய கட்டணத்தை விரைவில் அறிவிப்போம். " என்று தெரிவித்தார்